மதுரை மாவட்டம், திருப்பரங் குன்றம் வட்டம், கருவேலம் பட்டியைச் சேர்ந்தவர் முனைவர் சு.கிருஷ்ணன். பொருளாதாரத் துறையில் முனைவர் பட்டம் பெற்றவர். சென்னையில் உள்ள தமிழகப் புள்ளியியல் துறையின் மாநிலப் பயிற்சி நிலையத்தில் விரிவுரையாளர் பணியில் இருந்தவர்.
கடந்த 2019 டிசம்பர் மாதம் பணி நிறைவு பெற்று சொந்த ஊருக்கு வந்த கிருஷ்ணன், பாரம்பரிய விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதால், அந்த பந்தம் விட்டுப் போகாமல், தனது தாத்தாவும், அப்பாவும் செய்து வந்த விவசாயத்தை இப்போது கையில் எடுத்திருக்கிறார்.
அண்மையில் நம் தொடர்பில் வந்த இவரிடம், நீங்கள் செய்து வரும் விவசாயத்தைப் பற்றிச் சொல்லுங்களேன் என்றோம். அதற்கு அவர் கூறியதாவது:
எனக்கு அஞ்சரை ஏக்கர் நிலம் இருக்கு. நானு அரசாங்க வேலையில இருந்ததுனால, இந்த நிலத்துல விவசாயம் செய்யச் சொல்லி, என் தம்பிகிட்ட விட்டுருந்தேன். ஆனா அவரும் விவசாயம் செய்ய முடியாம, நிலத்தைச் சும்மா போட்டுட்டாரு. அதனால நிலம் முழுசும் முள்ளுச் செடிக முளச்சு, புதர்க்காடா கெடந்துச்சு.
நானு ரிட்டயர்டு ஆகி கரும்வேலம் பட்டிக்கு வந்ததும், முள்ளுக்காடா கெடந்த நிலத்தைச் சீர்திருத்தம் செஞ்சேன். எங்க பக்கம் ஓரளவு நல்ல மழை பேஞ்சதுனால, கெணத்துல தண்ணி பரவாயில்ல. ஓரத்துலயே நிலையூரு கண்மாயும் இருக்குறதுனால, தண்ணி பிரச்சினை இல்ல. அதனால, நிலம் முழுசும் பயிர் செய்ய முடியுது. அதுலயும், அஞ்சரை ஏக்கரும் இயற்கை விவசாயம் தான் செய்யிறேன்.
இதுக்காக, மூனு வருஷமா தமிழ்நாடு அங்ககத் துறையில பதிஞ்சு, அங்கக விவசாயின்னு சர்ட்டிபிகேட் வாங்கி வச்சிருக்கேன். திண்டுக்கல் காந்திகிராம் பல்கலைக் கழகத்துல, மூலிகை சாகுபடியில, ஒரு வாரம் பயிற்சி எடுத்திருக்கேன்.
மதுரை வேளாண்மை அறிவியல் நிலையத்துல, தேனீ வளர்ப்புப் பயிற்சி எடுத்திருக்கேன். பெரியகுளம் தோட்டக்கலைக் கல்லூரியில, ஒரு வாரம் முருங்கை வளர்ப்புப் பயிற்சியில கலந்துக் கிட்டேன். இதனால, விவசாயத்துல சில அடிப்படை விஷயங்கள தெரிஞ்சுக் கிட்டேன். ஏன்னா, நானு விவசாயக் குடும்பத்த சேர்ந்தவனா இருந்தாலும், அதை விட்டுட்டுப் போயி பல வருஷங்க ஆகிப் போச்சுல்ல, அதுக்காகத் தான்.
இன்னைக்கு சுற்றுச்சூழல் பாதிப்பு அதிகமா இருக்கு. அதனால, ஒன்னே முக்கால் ஏக்கரு நெலத்துல வேப்ப மரங்கள வச்சிருக்கேன். முக்கால் ஏக்கரு நெலத்துல செடி முருங்க, இன்னொரு முக்கால் ஏக்கரு நெலத்துல கரும்பு முருங்கய சாகுபடி செஞ்சிருக்கேன். மிச்சம் இருக்குற நெலத்துல, தினை, குதிரைவாலி, உளுந்து, துவரை, பாசிப்பயறு, எள்ளுன்னு செய்வேன்.
இப்போ கொஞ்சம் வாழை போட்டுருக்கேன். ஆனா காய்க்கு விடல. இலையாவே அறுத்து விக்கிறேன். ஏன்னா, பன்னிக தொல்லைய தாங்க முடியல. வாழைக் கிழங்க தோண்டித் திங்குது. இப்பிடி இருக்கும் போது, குலை தள்ளிக் காய்க்கிற வரைக்கும் வாழைய இருக்க விடுமா பன்னிக?
தோட்டத்துல ரெண்டு தேனீப் பெட்டிகள வச்சிருந்தேன். ஒருநாள் ராத்திரி, என்ன நடந்துச்சுன்னு தெரியல. பன்னிக, இந்த ரெண்டு பெட்டியவும் கீழே தள்ளி விட்டு நாசம் பண்ணிட்டுப் போயிருச்சு. ஓரத்துல கண்மா இருக்குறதுனால, ராத்திரியில இரைக்காக வெளிய வருற பன்னிக, பகல்ல அங்க போயி ஒளிஞ்சுக்கிருது.
அது மாதிரி, இந்தக் கிளி, மயிலுக தங்குறதுக்கு வசதியா, பக்கத்துல தென்னந் தோப்புக இருக்கு. இதுக, நெலத்துல விளையிற எதையும் விட மாட்டேங்குது. ஒரு ஏக்கருல தினைய சகுபடி செஞ்சு, பத்து ஆள விட்டு அறுத்து, களத்துல போட்டு அடிச்சுத் தூத்துனா, வெறும் பத்துக் கிலோ தினை தான் இருந்துச்சு. எல்லாத்தையும் கிளிகளும் மயில்களும் தின்னுட்டுப் போயிருச்சு. இதுகள கட்டுப்படுத்த முடியல.
இப்ப சமீபத்துல, ஒரு ஏக்கருல எள்ள வெதச்சு அறுவடை செஞ்சேன். 175 கிலோ எள்ளு கெடச்சுச்சு. திருமங்கலம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்துக்குக் கொண்டு போயி, கிலோ 131 ரூபான்னு, 22,925 ரூபாய்க்கு வித்தேன். ஆனா, மொத்தச் செலவு 23,400 ரூபா. இதுலயும் இந்த மயிலுக, கிளிக தொல்லை இல்லேன்னா, இன்னொரு 25 கிலோ எள்ளு கூடுதலா வந்துருக்கும். அது, எனக்கு லாபமா நின்னுருக்கும்.
நானு மட்டும் தான் இந்த விவசாயத்த பாத்துக்கிறேன். கூடமாட உதவி செய்ய ஆளில்ல. அதனால கவனிப்பு பத்தாதுன்னு நெனைக்கிறேன். தோட்டத்துல இருந்து முழுசா கவனிச்சா, இயற்கை விவசாயம் நல்லாவே இருக்கும் என்றார்.
பசுமை